Description
வான் பொய்ப்பினும் தான் பொய்யா பொன்னி நதியை ஆயுள் ரேகையாய்க்
கொண்டது சோழநாடு. நீரின் மகத்துவத்தை உணர்ந்தவர் சோழவேந்தர் கரிகால்
பெருவளத்தான். நிலத்தைக் கொண்டு சுழல்வது உலகெனில் நீரைக் கொண்டு
முகிழ்வது உழவு என உணர்ந்து, காலத்தை வென்று நிலைத்திருக்கும்
கல்லணையைக் கட்டியவர்.
அத்தகைய பெருவீரரின் வாழ்வினை இளமைப் பருவத்திலிருந்தே
எடுத்துரைக்க புனையப்பட்ட நூலே சோழவேங்கை கரிகாலன்.
தாய் வயிற்றிலிருக்கும் போதே மணிமகுடத்தை அடைந்தாலும், சோழத்
தலைநகர் புகாரில் இருக்க இயலாமல் பிறப்பிலிருந்து பகையால் துரத்தப்பட்டு
வெவ்வேறு நாடுகளில் மறைந்திருந்த ஒரு எரிமலையின் புறப்பாடே இந்த நூல்.
சங்க காலத் தமிழர்களின் வாழ்வு முறை, பண்பாடு, கலை, கல்வி, வணிகம்
என்று கால் பதித்த அனைத்திலும், தடம் பதித்த தொன்மை மிக்க தமிழ் மரபின்
மேன்மைகளைத் திரட்டி இந்நூலில் அளித்துள்ளேன். பெருமை மிக்க தொல்குடியின்
பழமைகளை மறந்து விட்டு அதன் எச்சங்களை மட்டுமே கீழடியிலும், ஆதிச்ச
நல்லூரிலும் கண்டு வியந்து கொண்டிருக்கிறோம். சங்க காலத் தமிழர்களின்
வாழ்வினைக் குறித்த மேலும் பல தகவல்களை இந்நூல் அளிக்குமென நம்புகிறேன்.