Description
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும் மொழியாக, ஆழமான சுரங்கத்தில் இருந்து கேட்கும் அபயக் குரல் சில கவிதைகளில் தொனிக்கிறது. ஆதூரமும், அணங்கு முகமும், அன்பின் நிமித்தங்களில் பேதமையும் பெருந்திமிரும் கொண்ட சொல்முறையை முயன்றிருக்கிறார். வாழ்வின் போதாமைகளை இட்டு நிரப்ப விழைவதும், புத்திளமை மிக்க ஓர் உலகை சொற்களின் வழி கனவு காண்பதுவும் கவிஞர்கள் இயல்பு. ரம்யாவின் கனவு இது. இதில் செருந்தி பூத்திருக்கிறது, அதில் அந்த நிலத்தின் கவிச்சி கொஞ்சம் விரவி இருக்கிறது.
- கவிஞர் நேசமித்ரன்