Description
வேகமாக நகரமயமாகிவரும் இந்தியாவில், மக்கள் மனங்களிலிருந்து கிராமப்புறங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டு கிராமங்களில் பயணித்து, வாழ்வாதாரம் அழிந்துவரும் நிலையிலும் உற்சாகமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் அசாதாரணமான அன்றாட மனிதர்களைச் சந்தித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அபர்ணா கார்த்திகேயன். இதிலிருக்கும் நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மூலம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை, உருவான எதிர்பார்ப்புகளை, ஏற்பட்ட தகர்வுகளை உணர்ச்சிவசப்படலோ மிகைப்படுத்தலோ இன்றி ஆவணப்படுத்தியிருக்கிறார். அவர் சந்தித்த மக்கள் அவரிடமும் வாசகர்களிடமும் கேட்கும் கேள்விகள் இவை: ‘விவசாயிகள் இல்லாமல் உணவுப் பாதுகாப்பு என்னவாகும்?’ ‘83 கோடி மக்களை ஒதுக்கிவிட்டு ‘வளர்ச்சி’ எப்படி சாத்தியப்படும்?’ ‘எந்த விதமான கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க விரும்புகிறோம்?’
பத்திரிகையாசிரியர் பி. சாய்நாத், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, எழுத்தாளர் பாமா முதலியோரின் நேர்காணல்களையும் உள்ளடக்கிய இந்நூல், தமிழ்நாட்டின் பாரம்பரிய வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் கடுமையான, தொடர்படியான சேதங்கள்பற்றி திறனாய்வு சார்ந்து தெளிவான ஓர் வரைபடத்தை வழங்குகிறது.