Description
சுகாவின் எழுத்துகளை வாசிக்க கண்களை இடுக்கி, புருவத்தை நெரித்து, க்ரூப் - 1 மாணவனைப் போல் தயாராக வேண்டியதில்லை. வெள்ளிக்கிழமை மாலைகளில் சிலேட்டுப் பையோடு வீடு நோக்கித் துள்ளிக் குதித்தோடும் எளிய மாணவனாக இருந்தால் போதும். புன்னகையும் கண்ணீரும் கலக்கும் வினோத நறுமணங்களால் ஆன திருநெல்வேலியின் தெருக்கள், மனிதர்கள், அவர்களின் பேச்சு வழக்கு, உடல்மொழி எல்லாவற்றையும் நுட்பமும் குறும்புமாகப் பதிவு செய்யும் இவரது எழுத்துக்குள் புகுந்தால் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் இறங்கிவிடலாம். திரைப்பட இயக்குநரான சுகா, இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவர்களுள் முக்கியமானவர். சுகா எழுதிய இசைக் கட்டுரைகள் மிகவும் நுட்பமானவை எளிமையின் கைகளால் நெஞ்சைப் பற்றிக் கொள்பவை. ‘வடக்குரத வீதி’ புத்தகம் அதன் தலைப்பைப் போலவே, அங்கே இருக்கும் ரத்தமும் சதையுமான நெல்லை மக்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தை அமரர் கிரேஸி மோகனின் வார்த்தைகளில் சொன்னால் ‘பரமசுகா’. (சுகாவின் ‘உபசாரம்’ மற்றும் ‘வேணுவனவாசம்’ நூலில் உள்ள கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன).