Description
ஒரு வக்கீலாகத் தொடங்குகிறது காந்தியின் வாழ்க்கை. இறுதியில் அவரது நெஞ்சில் பாய்ந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் அவரை மண்ணில் வீழ்த்தும்போது அவர் மகாத்மாவாகி விட்டிருந்தார். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலான காந்திஜியின் முக்கிய அரசியல் தருணங்களை இந்த நூல் அலசுகிறது. காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் பங்கு, அவரது வாக்குமூலம் எனப் பலவற்றையும் இந்த நூல் ஆராய்கிறது. தென் ஆப்பிரிக்க ரயில் நிலையத்தில் காந்திக்கு நேர்ந்த அவமதிப்பு, மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்காக அங்குத் தொடர்ந்த போராட்டம், இந்தியச் சுதந்திரப் போராட்டப் பங்கெடுப்பு, சுதந்திர இந்தியாவின் வடிவமைப்பு என காந்திஜியின் வாழ்க்கை போராட்டங்களாலும் வலிகளாலும் நிறைந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே அவரது உயிர் இந்திய மண்ணிலேயே பறிக்கப்பட்டது. மதம் என்பதை ஆன்மிக வழியில் முன்னெடுத்தவர் காந்தி. காந்தியின் தீவிர ஆன்மிகக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள இயலாத தீவிர மதவாதியான கோட்ஸே காந்திக்கு முன் துப்பாக்கியோடு வந்தபோது, காந்தியின் உடல் பயணம் முடிந்து, அவரது தியாகத்தின் பயணம் தொடங்கியது. இன்று வரை உலகம் அந்தத் தியாகத்தை நினைவுகூர்கிறது. காந்திஜியின் நீண்ட நெடிய வாழ்க்கையில் அவரது முக்கியமான பக்கங்களை சாது ஸ்ரீராம் திறம்பட இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.