Description
சேர,சோழ,பாண்டியர்கள் இந்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் எனும் பெருமைக்குரியவர் கள். சேர நாடு தந்தமுடைத்து" "சோழநாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து; என்ற பெருமைக்குரியது.
இத்தகைய மூவேந்தர்களின் வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி வழங்கியுள்ள ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை, வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் ஆகிய மூவரும் பாராட்டுக்குரியவர்கள்.
மதிப்பிற்குரிய அறிஞர் பெருமக்கள் நமது அரசுகளுக்கு உதவியாக உருவாக்கியுள்ள இவ்வரலாற்று படைப்பு, காலத்தை விஞ்சி நிற்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு மேற்கூறிய மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில், தமிழர் நாகரிகம் உயர்ந்த நிலையை அடைந்தது.
சங்க காலம் என்பதே சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும்.குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாற்றைக் காண முயன்றவர்களில் பெரும்பாலோர் பல்லவர்,சோழர், பாண்டியர்களைப் பற்றியும் அவர்களது வரலாற்றையுமே மேன்மேலும் ஆராய்ந்தனரே அன்றி சேர நாட்டு அரசர்கள் வரலாற்றைக் காண முயலவில்லை. அதற்கு முக்கிய காரணம் சேரநாடு இன்று கேரள நாடாக மாறிவிட்டது என்பதுதான்!
இருப்பினும் சேர அரசர்கள், சேர மக்கள் வாழ்ந்த ஊர்களும், அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் இலக்கிய கண் கொண்டு நேரில் சென்று காண்போர்க்குப் புலனாகாமல் போகவில்லை!