கேரளப் பெண் தெய்வங்களின் தோற்றத்தில் தாருகன் கதை இணைந்தது போலவே கண்ணகி கதையும் இணைந்துள்ளது. தாருகனின் இடத்தில் மதுரைப் பாண்டியனையும் காளியின் இடத்தில் கண்ணகியையும் வைத்தும். காளி தாருகனை வதைத்த நிகழ்ச்சியைக் கண்ணகி பாண்டியனைக் கொன்றதற்கு ஒப்பிட்டும் புனையப்பட்ட ‘தோற்றம் பாட்டுக்கள்’ கேரளத்தில் வழக்கில் உள்ளன. தமிழகத்தில் வழிபாடு பெறும் மாரியம்மன், முத்தாரம்மன். ரேணுகாதேவி. துரௌபதை அம்மன் என்னும் பெண் தெய்வங்களைப் போலவே கேரளக் கண்ணகியும் வெப்புநோயுடன் இணைக்கப்படுகிறாள். இது குறித்த கதைகளும் உண்டு. கொடுங்கல்லூர் ‘வசூரிமாலா என்னும் தெய்வத்திற்கு ஒற்றை முலைச்சி என்ற பெயரும் உண்டு திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கோவில் பத்து நாட்கள் விழாவில் சிலப்பதிகாரக் கதை மலையாள மொழியில் பாடப்படுகிறது. இப்பாடலைத் ‘தோற்றம் பாட்டு” என்றே கூறுகின்றனர். இவ்வாறு ஆற்றுக்கால் பகவதி கோயிலில் பெண்கள் கடல்போல் திரண்டு வந்து பொங்கலிட்டுக் கொண்டாடும் விழா உலகப் புகழ்பெற்றுள்ளது. இந்தப் பகவதியே கண்ணகி என விரிவாக விளக்குகிறது இந்நூல்.