வானலைகளில் ஒரு வழிப்போக்கன்


Author: B.H.அப்துல் ஹமீத்

Pages: 316

Year: NA

Price:
Sale priceRs. 500.00

Description

அது மின்சாரம் இல்லாத காலம். சங்கானையில் கதவுகளற்ற வீட்டில் குடியிருந்தோம். அப்பாவின் றலி துவிச்சக்கர வண்டியை (raleigh bicycle) வாசலின் குறுக்காக விட்டுவிட்டு ஓலைப்பாயில் கவலைகளற்று தூங்குவது வழமை.
தொலைபேசியோ, தொலைக்காட்சியோ இல்லாததால் ஒரே துணையாக இருந்தது வானொலியே.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இரவு செய்திகளின் பின் BBC, Verithas, .... என்று அப்போதிருந்த செய்தி மூலங்களை நாடினாலும் மீண்டும் வருவது வானொலி நாடகங்களிற்கு.
படுக்கலாம் என்று அப்பாவோ அம்மாவோ உறுக்கினாலும் உறங்காமல் கேட்ட பின்பே தூங்கிய ஞாபகங்கள் உண்டு.
Washing powder Nirma... Nirma... என்று அன்று கேட்ட விளம்பரங்கள் முதல் திரையிசைப் பாடல்கள்வரை நினைவிலிருத்தி பாடிய நாட்களையும் கேட்ட கம்பீரக் குரல்களையும் நினைவிற்கு கொண்டு வந்தது அன்பு அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீதின் " வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" நூல்.
சாதாரண மனிதர்கள் எப்படி சாதனையாளர்கள் ஆகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு வழிகளை சொல்கிறார் ஆசிரியர்.
01. வாய்ப்புகளை உருவாக்குதல்.
02. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தல்.
இதில் இரண்டாவது வழியில் பயணிக்கும் ஆசிரியரின் அர்ப்பணிப்பும் , முயற்சியும், பயிற்சியும் வியப்பூட்டுகின்றன.
வானொலி என்றாலே என்னவென்றே தெரியாது "சிறுவர் மலர்" நிகழ்ச்சி பார்க்க அழைப்பின்றியே செல்லும் மாணவன் அன்று வராத ஒரு சிறுவனுக்காக நடித்து பின் அவனது 18 வயதிலேயே அறிவிப்பாளராகிறான்.
கால ஓட்டத்தில் தன்னை பட்டை தீட்டி அறிவிப்பாளர்களிற்கே ஒரு பாடமாகி உலகப் புகழ் பெறுகிறான்.
இவ்வளவு புகழை பெற்றும் தன்னடக்கமாக நான் என்று நூலெங்கும் குறிப்பிடாமல் இவன் என்றே தன்னை விளிக்கிறார் ஆசிரியர்.
நூலானது சுய புராணமாக இல்லாது அப்துல் ஹமீது வானொலியில் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை ஆதாரங்களுடனும் படங்களுடனும் எடுத்தியம்புகின்றது. அதற்கு முன்பு இடம்பெற்ற உண்மை வரலாற்றையும் எதிர்காலத்தில் எதை கவனிக்க வேண்டும் என்ற ஆசிரியரின் அவாவையும் கூறி நிற்கின்றது.
இந்த நூலை இவ்வளவு விபரமாக எழுதுவதற்கும், தகவல்களை சேகரிப்பதற்கும் ஆசிரியர் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். இல்லாவிடின் வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களையும் தொகுக்க யாரும் நினைக்காத தகவல்களையும் இவ்வளவு நேர்த்தியாக கலை நயத்துடன் வடிவமைத்தல் சாத்தியமில்லை.
வாழ்விலே சவால்கள் வருகின்றபோது, அழுத்தங்கள் அதிகரிக்கும்போது அல்லது வழமைகளிற்குள் மூழ்கிப்போகும்போது அவற்றிலிருந்து மீட்டெடுப்பவை நல்ல புத்தகங்களே.
அந்தவகையில் ஒரு அருமையான நூல். வானொலியை நேசிப்போர் தவறவிடக்கூடாதது. நண்பர்களிற்கு வாசிக்க பரிந்துரைக்கின்றேன்
குறிப்பு: அந்த கணீர் குரலை கேட்க விரும்புவோருக்கு சுவையான தகவலுடனான இணைப்பு முதலாவது பின்னூட்டத்தில்....

You may also like

Recently viewed