Description
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பார்ப்பதினூடாக உருவாகும் கவித்துவத்தை முன்வைப்பவை. ஆகவே புனைவிலிருந்து தாவி கவிதையைச் சென்றடைபவை. ஏற்கனவே வெளிவந்த அவருடைய கவிதைகள் தமிழில் மிகப்பரவலான வாசிப்பு பெற்றவை.
தமிழில் மிகப்புகழ் பெற்ற அயல்மொழிக்கவிஞர் எவர் என்று கேட்டால் இணைய பகிர்வுகளின் அடிப்படையில் கல்பற்றா நாராயணனையே ஐயமின்றி சொல்லமுடியும். எளிமையானவை. மெல்லிய நகைச்சுவை ஓடுபவை. ஆழ்ந்த தத்துவ தரிசனங்களை நோக்கி எழுபவை. கூடவே வாழ்க்கையின் அரிய தருணங்களை ஒளிபெறச்செய்து நம்முன் நிறுத்துபவை. கல்பற்றா நாராயணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது.