தமிழ்ப் பண்பாட்டில் திரௌபதி வழிபாடு


Author: இரா.சீனிவாசன் & மு.ஏழுமலை

Pages:

Year: 2023

Price:
Sale priceRs. 380.00

Description

மாரியம்மன் வழிபாட்டினை உட்செரித்து வழிபடு நிலைக்கே சென்றுவிட்டது திரெளபதி வழிபாடு. இந்தப்பண்பாட்டை ஆய்வு செய்யும் நூல் ' தமிழ்ப் பண்பாட்டில் திரௌபதி வழிபாடு'. இரா.சீனிவாசன், மு.ஏழுமலை ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
அமெரிக்க ஆய்வாளரான ஹெல்பெய்த் மேற்கொண்ட ஆய்வில், திரௌபதி வழிபாட்டினை இந்திய, இந்து வழிபாட்டோடு அடையாளப்படுத்தப்படுவதை, 'சுருக்கிப் புரிந்து கொள்ளும் ஆய்வு’ என விமரிசிக்கும் அழகரசனின் கூற்றோடு இந்நூலின் இயல்கள் தொடங்குகின்றன. பாரதத்தைப் பொறுத்த அளவில், மூல மொழியில் இல்லாத, பல்வேறு இடைச்செருகல்கள் தமிழ்ப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், அவையே கூத்து, வழிபாடு போன்ற நிலைகளுக்குள் வரும்போது மேலும் பல மாற்றங்களைப் பெற்றுள்ளன.
இவற்றைப் பல்வேறு சான்றுகளோடு இந்நூல் ஆராய்ந்திருக்கிறது; கண்ணன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுதல், பாஞ்சாலி துகில் உரித்தல் போன்ற நிகழ்வுகள் வட மொழி பாரத்தில் இல்லை என்பதையும் மேற்கோளுடன் சுட்டிக்காட்டுகிறது. மேலும், அரவான் களப்பலி என்பதும் தமிழகத்தில் கூத்தாண்டவராகப் பண்பாட்டு மாற்றம் பெற்று, அது திருநங்கையருக்குரிய கடவுளாகக் கொள்ளப்பட்டதையும் இந்நூல் விவரிக்கிறது.
களப்பலி என்பது சங்கப் போர்க் காலச் சடங்கின் எச்சம் என்றும் அரவான் களப்பலியின்போது சிலைகளின் உறுப்புகளைக் கொண்டுவந்து, வயலில் வீசுதல், வீட்டுக் கூரையில் தூவுதல் நடைபெறும் என்று இந்நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். அன்றி, களத்தில் சூறை போடுதல் (ஒவ்வொரு வீட்டிலும் உணவினையும் சேகரித்து வந்து குவியப்படுத்தி, அதனை மீண்டும் பங்கிட்டுக் கொடுத்தல்)
என்பதற்குப் பின்னால் உள்ள பண்பாட்டுத் தொடர்ச்சி, அதன் சாதிய, வர்க்க சமநிலைப்படுத்தும் பின்புலமும் கூறப்பட்டுள்ளது.
இத்திருவிழாக்களில் சாதிய, வர்க்க நிலையில் ஒருவித நெகிழ்வு ஏற்படுவதையும் சுட்டிக்காட்டும் இவ்வாய்வு நூல், ஒரு சாதியினர், இன்னொரு சாதியினரைச் சார்ந்திருத்தல் எனும் நடைமுறை திருவிழாக்களில் நிகழ்த்திக் காட்டுவதைச் சுட்டுகிறது. சில மரியாதைகளும் ஊதியங்களும் (காப்புக் கட்டிக் கொள்ளுதல், தினப்படி பெறுதல் ) விளிம்பு நிலையினருக்குக் கிடைப்பதில்லை என்று சுட்டுகிறது. அரவான் களப்பலி வரும் அமாவாசை நாள், பாண்டியர்கள் பட்டம் ஏற்பதற்கு முன் செய்யும் இறப்புச் சடங்கு ஆகியவை, சம்ஸ்கிருத பாரதத்தில் இல்லை என்றும், அவை தமிழகப் பண்பாட்டில் இருப்பதற்குத் தமிழர்களின் நம்பிக்கை, உறவு முறைகளின் பின்னணி ஆகியவையே காரணம் என்றும் நூல் விளக்குகிறது.
திரௌபதி வழிபாட்டில் பலி முக்கியப் பங்காற்றுவதைச் சுட்டும் இந்நூல், உப்புவேலூர் பகுதியில், குருதிப் பலிக்குப் பதிலாகப் பூசணிப் பலி இருப்பதைக் கண்டறிந்துள்ளது; அதற்கு, அவ்வூர் சமணர்கள் அதிகம் இருக்கும் ஊர் என்பது காரணமாம். இது நூலின் நுண்மைக்கு ஒரு சான்று. வட தமிழகம் தொடர்பான மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் குறைவாக உள்ள நிலையில், பல ஆண்டுகள் கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த ஆய்வு நூல் கவனத்துக்கு உரியது.

You may also like

Recently viewed