Description
காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு (‘ஜெயனுக்கு) சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. பரிமாற்றத்தின் ஒரு சுற்று முடிய எதிர்த் தரப்பிலிருந்து இனி தரப்பட வேண்டும்.
–கவிஞர் பெருந்தேவி
இது ஒரு காதல் அனுபவக் கதை. பெருந்தேனை பெருக்கக்கூடிய கவிஞனின் இளம் காதல் முகம் வெளிப்படும் தீவிரமான அத்தியாயங்கள் கொண்டவை. அதற்கு நிகராகவே காதலின் கனவு படர்ந்த பெண்ணின் மனம் கொள்ளும் வண்ணங்கள் துலங்குபவை. காதலென்ற தற்செயலான பேரனுபவத்தை ஓர் இளம் பெண் சந்திக்கும்
போது அவள் அடையும் நிர்மலத்தை, துணிவை, சுயகண்டடைவின் பயணத்தை காட்டும் கதை. அனைத்துக்கும் மேலாக இது விதியின் கதை. 'உண்மையில் நான் ஜெயனின் பொருட்டு பெருநியதியுடன் எந்த ஆட்டத்தையும் ஆடத்துணியவில்லை. அதன் காலடியில் என்னை முழுவதும் அர்ப்பணித்து சரணடையவே விழைந்தேன்' என்று அருண்மொழிநங்கை உணர்வது ஊழின் பெருங்கையையே.
-எழுத்தாளர் சுசித்ரா (பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.)