Description
மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் சக மனிதர்களின் சந்திப்புகளுமே அவனை வழிநடத்திச் செல்கின்றன. வாழ்வில் ஏதோ ஒரு சோதனையில், விரக்தியில் இருக்கும்போது அதிலிருந்து நம்மை நகர்த்திக்கொண்டு செல்வது எத்தனையோ நிகழ்வுகளும் சந்திக்கும் சக மனிதரின் சந்திப்பும்தான். ஆம், தனி மனிதனின் வாழ்வு சக மனிதர்கள் எனும் தொடர்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் பவா செல்லதுரை தான் சந்தித்த மனிதர்கள், எதிர்கொண்ட சூழ்நிலைகள், தன்னைச் சந்தித்தவர்கள் பகிர்ந்துகொண்ட செய்திகள், தன் நண்பர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சொல்வழிப் பயணமாக ஆனந்த விகடனில் எழுதினார். தனி மனிதர்களின் செய்திகள், நடந்த சம்பவங்கள் என்பதை மட்டும் சொல்லாமல், அந்த மனிதர்கள் வாழ்வு, நடந்த சம்பவங்கள் சமூகத்தோடு எப்படித் தொடர்புகொண்டுள்ளன, சமூகச் சீர்குலைவை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் பவா செல்லதுரை. பவா செல்லதுரையோடு சொல்வழிப் பயணத்தைத் தொடருங்கள்!