Description
பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் ‘நான் பிறந்த க-வி-தை’ தொடரின் நோக்கம். அத்துடன் குறிப்பிட்ட கவிதை, கவிஞர் சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்வதாகவும் திட்டமிருந்தது. குறுந்தொகை கவிதை பற்றி முதல் கட்டுரையை எழுதி முடித்திருந்த நிலையில், நண்பர் சி. மோகன், பாதித்த கவிதையைப் பற்றி எழுதுவதை விட, பாதித்த கவிதைகளை வாசித்தபோது இருந்த மனநிலையையும் மூட்டத்தையும் சூழலையும் சென்று பார்த்து, மொழிக்குள் இழுத்துவர முடிந்தால் வித்தியாசமானதாக அமையும் என்று குறிப்பிடத்தக்க அளவிலான ஒரு தலையீட்டை நிகழ்த்தினார். தலைப்பில் ‘நான் பிறந்த கவிதை’யை ‘நான் பிறந்த க-வி-தை’ என்று மாற்றியவர் கவிஞர் தேவதச்சன். சி. மோகன் சொன்ன அடிப்படையை மனத்தில் கொண்டு அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதப்பட்டன. குறுந்தொகையிலிருந்து இத்தொடரை அம்ருதா மாத இதழில் பெருந்தொற்றுக்குச் சற்று முன்னர் தொடங்கினேன்.
இரண்டாவது அலைக்குப் பிறகு முடித்தேன். நவீன கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் என்னை முழுமையாக சிலகாலம் ஆட்கொண்டிருந்த கவிஞர்கள், கவிதைகளையே ‘நான் பிறந்த க-வி-தை’ தொடரில் எழுதவேண்டுமென்று நினைத்திருந்த நிலையில் எட்டு கட்டுரைகளோடு முடிப்பதே நேர்மையானதாகப்படுகிறது.சற்று நீட்டினாலும் பொய் தோன்றிவிடும்.
முதல் தொகுதிக்கு முந்தைய கவிதை தொடர்பான ஒரு மூல உருவகத்தை உருவாக்கியவர்களை மட்டுமே பிரித்தெடுப்பது சவாலாக இருந்த அதேவேளையில் தன்கதியிலேயே அடுத்தடுத்த கட்டுரைகள் நிகழ்ந்தன.
நவீன இலக்கியம் அறிமுகமான கல்லூரிப் பருவத்திலேயே சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆசிரியர்கள் நேரடியாக எனக்கு அறிமுகமாகிவிட்ட நிலையில் கவிஞராக பசுவய்யா என்ற சுந்தர ராமசாமி ஆரம்ப நிலையிலும் என்னைப் பாதிக்கவில்லை என்பது இந்தக் கட்டுரைகளை எழுதும்போதுதான் தெரிந்தது.ஞானக்கூத்தனின் ‘மீண்டும் அவர்கள்’ கவிதைத் தொகுதியைப் படித்தும் அந்தக் காலகட்டத்தில் அவர் என்னுள் தீவிரமான சலனங்களை ஏற்படுத்தவில்லை.