Description
நாம் ஒன்றைக் குறித்து சொல்ல விழைகிறோம்.அப்போது நம்மையறியாது அதற்கான வழிமுறைகளைத் துழாவுகிறோம். பதற்றம் வந்து சேர்கிறது. மனவெளியின் ராஜபாட்டைகளிலும் இடுக்குப் பாதைகளிலும் பொந்துகளிலும் சருகுகளின் கீழேயும்கூட தேடுகிறோம். ஒரு மணல்துகள் புரளும்போது அங்கே அது தொடங்கக்கூடும் என்று ஏக்கம் பெருக நாம் சஞ்சரிக்கிறோம். அப்போது நம் உதவிக்கு வந்து நிற்கும், அல்லது மறைந்து நின்று நமக்கு சமிக்ஞையளிக்கும் எதுவும் நமக்கு நிறைவளிக்கவில்லை. அவற்றையெல்லாம் நம் பிரக்ஞையில் எடுத்துப் போட்டுக் கொண்டு மேலும் போகிறோம். இப்போது நமக்குக் கொஞ்சம் வன்மம் ஏற்படுகிறது, பிடிவாதம் கூடுகிறது. கையில் வருவன ஏமாற்றம் தருவனாக இருந்தாலும் நாம் வலையை இன்னும் எட்டி, முடிந்தவரை ஆழத்தில் சென்று கவியும்படி வீசுகிறோம். இந்த நொடியில் நமக்கு இசைந்து போகும் ஒன்று அருளப்படலாம். நாம் அதனுடன் பொருந்திக்கொண்டு நகரலாம். இது, இதவொளியில் இளங்காற்றில் நிகழும் ஏகாந்த ஆலாபனையினூடே தெறித்து வந்தடையும் படைப்பூக்கச் சிலிர்ப்பல்ல; என்னைப் பொறுத்தவரை, ஆரவாரமும் அதீத நெருக்கடிப் பரபரப்பும் நிறைந்த ஒரு சந்தையில் கடும் வாக்குவாதச் சச்சரவின் பேரில் நமக்குரியதை மீட்டுக்கொண்டு வருதலாகும். எனக்குப் பெரும்பாலும் இப்படித்தான் அமைகிறது. சொற்களின் அர்த்தச் செறிவு என்று சொல்கிறீர்களே, அது அந்த பிரயத்தனத்தின் பாற்பட்டது. பிரயத்தனமே என் இயல்பாகிறது.