Description
டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 11-7-1920இல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் பிறந்தார். தந்தையார் திரு. இராசகோபால் ; தாயார் திருமதி மீனாட்சி சுந்தரத்தம்மாள். பள்ளிப் படிப்பைப் பட்டுக் கோட்டையிலும், மேற்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் மேற்கொண்டு தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். 1972ஆம் ஆண்டில் மதுரை-காமராசர் பல்கலைக் கழகத்தால் மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றவர்.
பள்ளிப் பருவத்திலேயே தன்மதிப்பியக்கத் தொடர்பும், பகுத்தறிவு நெறிப் பற்றும் கொண்டு விளங்கிய நாவலர், அவற்றைத் தம் வாழ்க்கையின் இறுதிவரை வழுவாது கடைப்பிடித்தவர், 1944ஆம் ஆண்டு முதலாகப் பகுத்தறிவுத்தந்தை பெரியாரைத் தலைவராகவும், அறிஞர் அண்ணாவை வழிகாட்டியாகவும் கொண்டு திராவிட இயக்கத்தின் முழுநேரச் செயல் வீரராக அயராது தொண்டாற்றியவர்.
நாவலர் 1962இல் தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பங்கேற்றார். அடுத்து, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவைகளில் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பேற்றுப் பணியாற்றியவராவார்.
பொதுவாகத் தமிழ் இலக்கியங்களை - குறிப்பாகப் பாவேந்தர் பாடல்களை அரசியல் மேடையில் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் நாவலருக்குப் பெரும் பங்கு உண்டு.
நாவலர் சிறந்த பேச்சாளர்; சிந்தனையாளர்; நாடறிந்த எழுத்தாளர்; அரசியல்வாதி;சீர்திருத்தச் செம்மல்; ஒழுக்கம் போற்றியவர்; புகழ் படைத்த நிருவாகி, அறிஞர் அண்ணா அவர்களால் நாவலர் என்றும், நடமாடும் பல்கலைக் கழகம் என்றும் அன்புடன் அழைக்கப்பெற்றவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களைத் தமிழில் எழுதியவர்.
நாவலர் இயற்றிய திருக்குறள் தெளிவுரை எனும் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகில் அவர்தம் புகழினை என்றும் நிலை நிறுத்துவதாகும்.