Description
முப்பதாண்டுகளுக்கு முன்பு, பொதுக்குழாயில் தண்ணீரைத் திறந்து விட்டு விளையாடும் பிள்ளைகளை வையும் எங்களூர் பாட்டி, ‘பாவிப்பயலுகளா... இப்பிடியே தண்ணியை வீணாக்குனீயன்னா காசு குடுத்து வாங்கிக் குடிக்கிறது மாதிரி ஆகிப்புடுமுடா' என்பாள். பாட்டி இன்று இல்லை. அவள் சொன்னது நடந்துவிட்டது. பெரிய பெரிய கேன்களில் தண்ணீர் வாங்கியதுபோய், இப்போது ரயில் நிலையங்களில் டம்ளர்களில் தண்ணீர் விற்கத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொருமுறை தாகமெடுக்கும்போதும் வாங்கி அருந்த அரை லிட்டர், கால் லிட்டர் பாட்டில்கள் எல்லாம் வந்துவிட்டன. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் ஈட்டலில் பெரும்பகுதியைத் தண்ணீருக்காகச் செலவழிக்க வேண்டிய நிலை.