இராஜராஜ சோழன் சபதம்


Author: முகிலன்

Pages:

Year: 2023

Price:
Sale priceRs. 250.00

Description

அன்பிற்கினிய வாசக அன்பர்களுக்கு,
முகிலனின் வணக்கமும், வாழ்த்துக்களும
சுமார் 48 ஆண்டுகள் எழுத்துலகில் பயணித்து வருபவன் நான். இந்நாவலுக்கு நுழைவாயில் எழுதும்போது எனக்கு அகவை எழுபத்தாறு ஆரம்பித்து நடைபயிலத் தொடங்கியுள்ளது.
இராஜராஜ சோழனின் சபதம்’ என்னும் இச் சரித்திர நாவலை நான் எழுதுவதற்கு எனக்கு மன நலமும், உடல் நலமும் கொடுத்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பரம கல்யாணி சமேத ஸ்ரீ சிவ சைல நாதரை வணங்கி அவர் தம் பாதங்களில் இந்நாவலைச் சமர்ப்பிக்கிறேன்.சரித்திர நாவல்களை எழுதி வாசக அன்பர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்து அவர்களுடன் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்பதைக் கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். ‘நாளென.ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளாக’ நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் வாசக அன்பர்களின் பேரவாவை மேன்மேலும் தூண்டி அவர்கள் உள்ளங்களில் வரலாற்று நிகழ்வுகளைப் பதியவைக்க வேண்டும் என்பதே என்னுடைய இலட்சியம்.சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மன் தன்னுடைய தூதனை உதகையில் சிறை வைத்து விட்டான் என்பதற்காக வெகுண்டெழுந்த இராஜராஜ சோழன் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுடன் ஒன்பது சுரமும் தாண்டிச் சென்று, காந்தளூர்ச்சாலை கலமறுத்து, உதகை மாநகரை நிர்மூலமாக்கித் தூதனை மீட்டான் என்பது வரலாற்றுச் செய்தி. இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போர் இது. இதனையே ஆதாரமாகக் கொண்டு இந் நாவலை உருவாக்கியுள்ளேன்.இந் நாவலை எழுதுவதற்கு மூவருலா பாடல் வரிகளும், இராஜ ராஜ சோழனின் திருக்கோவலூர்க் கல்வெட்டுச் செய்தியும் ஆதாரங்களாக விளங்குகின்றன. வாசக அன்பர்களுக்காக அந்த வரிகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
.இந்நாவலில் வரும் இராஜ ராஜ சோழன், சோழ இளவரசன் இராஜேந்திரன், அமைச்சர் கிருஷ்ணன் இராமன், படைத் தலைவர்கள் கம்பன் மணியன், மதுராந்தகன் கண்டராதித்தன், சேர மன்னன் பாஸ்கர ரவி வர்மன், பாண்டிய மன்னன் அமர புஜங்கன் போன்ற உண்மைக் கதாபாத்திரங்களுடன், படைத் தலைவன் இராஜேந்திரன், நித்ய விபூஷன், தேவயாழினி, அங்கயற்கண்ணி, சேர இளவரசி மதுமனோகரி படைத் தலைவன் குருகிருபாகரன் போன்ற கற்பனைக் கதா பாத்திரங்களையும் இணைத்து இந்நாவலை மிகச் சிறந்த முறையில் உருவாக்கியுள்ளேன்.
‘இராஜராஜ சோழனின் சபதம்’ என்னும் இந்நாவலை எழுதுவதற்குச் சுமார் ஏழு மாத காலம் தேவைப் பட்டது. இந்த ஏழு மாதமும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, உதவியவர் என்னுடைய துணைவியார் திருமதி.சுப்புலக்ஷ்மி அவர்கள் தான் என்பதை இங்கே மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என் துணைவியார்க்கும்,.இந் நாவலுக்குத் தேவையான வரலாற்றுக் குறிப்புகளை சேகரித்துக் கொடுத்து உதவிய என்னுடைய இரண்டாவது மைந்தன் திரு.கிருஷ்ணமூர்த்திக்கும், மடிக்கணினியில் பதிவேற்றம் செய்ததை முறைப்படுத்தி அழகு மிளிரும் நாவலாக இதனை உருவாக்கித் தந்த என்னுடைய மூன்றாவது மைந்தன் திரு. முத்துராமசாமிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சொல்வதற்கும் அப்பாற்பட்ட நெருக்கம் உடையவராயினும் நன்றி தெரிவிப்பதுதான் நல்லொழுக்கத்தின் அடையாளம் அல்லவா? ஆகையால்தான் நான் இவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளேன்.
இச்சரித்திர நாவலை நான் எழுதுவதற்குப் பெரிதும் உதவி புரிந்து, ஊக்கம் தந்த ஸ்ரீ பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியின் செயலர் திரு.சுந்தரம் சார் அவர்களுக்கு என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குத் தேவையான ஆய்வு நூல்களைத் தந்து உதவிய ஸ்ரீ. பரமகல்யாணி கல்லூரி நூலக அலுவலர் திரு. கண்ணன் அவர்களுக்கும், ஸ்ரீ.பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி நூலக அலுவலர் திரு. கார்த்திக் அவர்களுக்கும். என் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இராஜராஜ சோழனின் சபதம்’ நாவலைப் புத்தகமாக வெளியிட முன் வந்துள்ள வானதி…பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வாசக அன்பர்களுக்காக இந்நாவலின் பொற்கபாடம் திறக்கப்படுகிறது. படித்து மகிழுங்கள்! குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்!
நன்றி! வணக்கம்!

You may also like

Recently viewed