Description
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம், மற்றும் எதிர்கால வாழ்வின் இருண்ட பக்கங்கள் என எல்லாத் தளங்களிலும் நகர்த்திக் கொண்டே இருந்தார்கள்.இந்தக் கவிதைகள் ஏதோ ஒரு வகையில் வாழ்வின் சமனற்ற நகர்தலை வலியுடனும், வேதனையுடனும் பதிவு செய்கின்றன. பேராசிரியர் ச.வின்சென்ட் அவர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் இப்படியான ஒட்டு மொத்த உணர்வுகளையும் நமக்குள் கடத்த முயலும் முயற்சிகளே. அவருடைய கவிதைத் தேர்வு தாமஸ் ஹார்டி முதல் வால்ட் விட்மன் வரை ஒரு நுண்ணிய பார்வையுடன் அமைந்துள்ளது. மூலக்கவிதைகளின் சாரத்தை இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழில் ஒரு குழந்தையின் அழகிய நேர்கோட்டு அல்லது அ- நேர்கோட்டு சுவர் சித்திரங்களாக வரைகின்றன - ஜனமித்திரன்.