Description
ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை, பிரபஞ்சத்தின் இருப்பை, ஒரு எளிய சூத்திரமாக்கிவிட முடியும் என்றே படுகிறது - இருமைகள் உருவாக்கும் தொலைவும், அவற்றுக்கிடையிலான ஊசலாட்டமும் என. இம்மை மறுமை என்று ஆரம்பித்து முந்தைய கணம் இந்தக் கணம் என்று முடித்துவிடலாம். தர்க்கம் அதர்க்கம், அண்மை சேய்மை என்று சகலமும் இந்த இருமைக்குள் அடங்கிவிடும். புனைகதையைப் பொறுத்தவரை, ஊசலின் எந்தப் புள்ளியுடன் உங்களை அடையாளம் காண்கிறீர்கள் என்பதே உங்கள் பார்வையை, உங்கள் கலை யத்தனத்தை நிர்ணயிக்கிறது. எழுதுகிறவருக்கு மட்டுமில்லை, வாசகருக்கும் பொருந்துகிற நியதி இது. அந்த வகையில், புனைகதை என்பதே வாசக மனத்துடன் கதாசிரியர் மேற்கொள்ளும் மானசீக உரையாடலே... இந்தத் தொகுப்பின் கதைகளும், என்னுடைய பிற கதைகள் போலவே, கனவிலிருந்து நனவுக்கும் நினைவிலிருந்து நிஜத்துக்கும் இடையே ஊசலாடுகிறவைதாம். என்னுடைய எட்டாவது சிறுகதைத் தொகுதி இது.
- யுவன் சந்திரசேகர்