Description
வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலிபோல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார்கள். அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்துகாட்டப்பட்டுள்ளன. அரசர்கள், போர்த்தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை.
நூலின் இந்த மூன்றாம் பகுதி ‘இரண்டாம் ஆயிரமாண்டின் மறுமலர்ச்சியாளர்’ அஹ்மது சர்ஹிந்தீயின் சீர்திருத்த, மறுமலர்ச்சி வரலாற்றை விரிவாகப் பேசுவதுடன் சர்ஹிந்தீயின் காலகட்டம், இந்தியாவில் பரவியிருந்த சிந்தனைரீதியான, மார்க்கரீதியான தடுமாற்றங்கள், இஸ்லாத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகள் அனைத்தையும் விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து, அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.