Description
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனித்துவத்தையும் உள்ளார்ந்த தத்துவத்தையும் ஒருங்கே கொண்டு திரண்டிருக்கும் இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த வைதீக வைஷ்ணவர்களின் இடப்பெயர்வுகளையும், அவர்கள் உடன் கொண்டு சென்ற கலாசாரக் கூறுகளையும், அழகுற கண்முன்னே சித்திரமாய் விரிக்கிறது. அக்காலகட்டத்திலே வாழும் வாசக அனுபவம் உறுதி. பஞ்சம் பிழைக்க வேர்களை விட்டுச் சென்று பிழைப்பு தேடும் அவலங்களையும், செய்யும் சமரசங்களையும், பெறும் உதவிகளையும், தலைமுறைகள் கடந்தும் விட்டுச்செல்லும் அதிர்வுகளையும் பிசிறின்றி நெய்துள்ளார் நாவலாசிரியர் ஆமருவி தேவநாதன்.
- எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்
ஒரு சமூகம் அதன் ஆகப்பெரும்பான்மையை மாநிலம் முழுவதிலிருந்தும் இடப்பெயர்வு செய்துகொண்டு வெளியேறியிருக்கிற வரலாறு பதிவாகவில்லை நவீன தமிழ் இலக்கியத்தில். ‘வந்தவர்கள்’ எனும் இந்த நாவல், பதிவாகாத இந்த இடத்தைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. நான்கு தலைமுறை வாழ்க்கையை, ஒரு பிராமணக் குடும்பத்தை வைத்து விவரிக்க முயல்கிறது இந்தப் படைப்பு. இதில் உள்ள சிறப்பம்சம் பிராமணர்களது தரப்பின் நியாயங்களை முன்வைக்கும் நேரத்தில் அவர்களது தவறுகளையும், நியாயமற்ற செயல்களையும் சேர்த்தே முன்வைப்பதுதான். இப்படைப்பை ஒரு வாசகர் ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால் இப்படைப்பின் அடிப்படையான உண்மையை ஒதுக்கிவிட முடியாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
ராஜகோபாலன் ஜா.