Description
வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆமாம். அதுதான் முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் விறுவிறு எழுத்தால் விவரித்து ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினார். ஒரு தொடர் இவ்வளவு நீண்ட நாள் எழுதப்பட்டதிலிருந்தே, அந்தத் தொடருக்கு வாசகர்களின் வரவேற்பு எப்படியிருந்தது என்பது புலனாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே அணை கட்டுமான ஒப்பந்தம் ஏற்படும் முன்பே, இருந்த சிக்கல்கள், நிபந்தனைகளில் ஆரம்பித்து, அணை கட்டுமானம் முடிப்பது வரை மிக விரிவாகவும் அழகாகவும் விவரித்து பெரும் வரலாற்றுப் புதினமாகத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அ.வெண்ணிலா. 150 ஆண்டுகளுக்கு முன் மிக உயர்ந்த மலைமேல் கட்டப்படும் அணைக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள், காலரா நோய் பரவி தொழிலாளர் பலரைப் பலிவாங்கிய துயரம், காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல், இயற்கை இடர்ப்பாடுகள் என பல இன்னல்களுக்கிடையே நடைபெற்ற பெரியாறு அணையின் கட்டுமானப் பணி எத்துணை சவால் நிறைந்தது என்பதை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துகிறது இந்த நீரதிகாரம். ‘முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் பென்னிகுக்' என அந்த அணை பற்றி சில வார்த்தைகளிலேயே அறியப்பட்டிருந்தது. ஆனால், அணை கட்டுமுன் இருந்த சிக்கல்களையும் அணை கட்டு மானத்தின்போது நடந்த துயரங்களையும், பெரும் முயற்சிகளையும் சொல்லிக்கொண்டு பெரும் வரலாறாகப் பாய்ந்து செல்கிறது இந்த நீரதிகாரம்!