Description
இயல்பாக ஒரு ஆணைப் பற்றி எவ்வளவு அவதூறுகளை சொன்னாலும் இதானே என்று போய்விடுகிற சமூகத்தோடு வாழ்ந்து வருகிறோம் நாம். அதே ஒரு பெண் என்றால் 'அவள் ஒரு மாதிரி கேரக்டர்' அப்படின்னு சொல்லிட்டா போதும் 'முன்புலம்' 'பின்புலம்' எல்லாம் சேர்த்து விவாதித்துப் பார்க்கிற சமூகம்தான் இது. விஜயா போராட்டத்தில் அதுவும் நடந்தேறியது. பெண்களே
இப்படிப் பேசினார்கள். 'இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது... என்ன நடந்து போச்சு. ஊர்ல உலகத்துல நடக்காதது' என்று பேசுகிற அளவிற்கு இருந்தது விஜயாவின் போராட்டம்.
பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே சொல்ல முன்வரவில்லை அதை வெளியே சொல்ல முன் வந்தவர்களில் விஜயாவும் ஒருவர்.
'கற்பு' என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. அப்படிப் பார்த்தால் கற்பு இழந்தவள் விஜயா அல்ல,வன்புணர்வு கொண்ட அந்த போலீஸ்காரர்கள்தான். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு அவளுக்கு ஆதரவாக பெண்கள்தான் முன்வர வேண்டும் என்ற கருத்தியலை உடைத்தெறிந்தது விஜயாவின் போராட்டம். பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் செரிப், முருகப்பன், பி.வி. ரமேஷ், சிறுவாலை நாகராஜ் என இன்னும் பலர்... இவர்களோடு இணைந்து போராடியவர் 'அத்தியூர் விஜயா'.
பெண்களும் போராடலாம் என்கிற மரபை உருவாக்கியவர்களில் அத்தியூர் விஜயா குறிப்பிடத்தக்கவர். பழங்குடி இருளர் பார்வையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் ஒரு போராளியாக திகழ்ந்தவர் அத்தியூர் விஜயா. மனித உரிமைப் போராட்டத்தில் பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர் அத்தியூர் விஜயா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் அத்தியூர் விஜயா உடன் பழகியவன், அந்த வகையில் இந்த புத்தகம் வெளியிடும் போது விஜயா இல்லாதது மன வருத்தம் தருகிறது. இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போராட விஜயா வழிவகுத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.
ஜோதி நரசிம்மன் அவர்களின் என்னுரையிருந்து............