Description
இது ஒரு பெண்ணின் கதை. பெண்களின் வாழ்க்கை குடும்பத்தோடு இறுக்கமாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதால் இது ஒரு குடும்பத்தின் கதையாகவும் அமைகிறது. தன்வரலாறு, பெண்ணை மையமாகக் கொண்ட குடும்ப வரலாறு என்றும் இதைக் கருதலாம். எழுத்தாளர் பொன்னீலனுக்கும் அவரது தாயார் அழகிய நாயகி அம்மாளுக்கும் இடையே ஒருநாள் நடந்த உரையாடல்தான் இந்த நூலின் வித்து. பொன்னீலன் தந்த கதைப் புத்தகத்தைப் படிக்கும் அவரது அன்னை, “எங் கதையை இந்தக் கதையை விட எத்தனையோ மடங்கு பெரிதா எழுதலாமே” என்று சொல்கிறார். அதைக் கேட்ட பொன்னீலன் தன்னுடைய கதையை எழுதும்படி அம்மாவைத் தூண்டுகிறார். அதன் விளைவே இந்த அரிய பதிவு.
நாவலைப் போன்ற விறுவிறுப்பும் பன்முகப் பரிமாணங்களும் கொண்ட இந்த நூல் ஒரு காலகட்டத்தின், ஒரு நிலப்பரப்பின், ஒரு பண்பாட்டின், ஒரு மக்கள் கூட்டத்தின் கதைகளைச் சொல்கிறது. பண்பாட்டு அசைவுகளிலும் திசையறியாத வாழ்க்கைப் பயணங்களிலும் ஆர்வம் கொண்டவர்கள் தவற விடக் கூடாத படைப்பு இது.