Description
அறிஞர் சோமலெ உலகம் - இந்தியா - தமிழ்நாடு என்றார் போல் முப்பெரும் பரிமாணங்களிலும் பயணநூல்களை எழுதி 'தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை' என்ற நிலைத்த புகழைப் பெற்றவர். பயண இலக்கியம், இதழியல், நாட்டுப்புறவியல், மொழி ஆய்வு, இனவியல் ஆய்வு, வாழ்க்கை வரலாறு குடமுழுக்கு மலர்கள். போன்ற துறைகளில், தமிழிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது நூல்களை ஆய்வுப் பொருண்மை ஆக்கியுள்ளது; லெனின் கிரேடு பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவரது 'வளரும் தமிழ்' நூலைப் பாட நூலாக்கியுள்ளன. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மற்றும் வடக்கு அயோவா பல்கலைக்கழகங்கள் தென்கிழக்காசிய நாடுகளின் உற்ற ஆலோசகராய் பெருமைப்படுத்தியுள்ளன. சோமலெ பிறந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் துடிப்போடு செயல்படும் அரசு கிளை நூலகத்திற்கு 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ நினைவு கிளை நூலகம் எனப் பெயரிட்டும், சோமலெ அவர்களின் நூல்கள் அனைத்தையும் டிசம்பர் 2022 இல் நாட்டுடமையாக்கியும், தமிழக அரசு சோமலெ அவர்களின் வாழ்வுப் பணிகளை நினைவு கூர்ந்துள்ளது. 'தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்' என்ற இந்த நூலை இந்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்பிற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் சோமலெ எழுதினார். இந்த நூலை இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்த்து நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.