Description
"உங்களுக்கு இசை பிடித்தமானதில்லை என்றால், இந்தக் கதைகளை அப்படியே விட்டுவிடுங்கள். அவை உங்களை எந்தவிதத்திலும் கவரப்போவதில்லை. சூரிய அஸ்தமனத்தை விடச் சமூகத் தொடர்புகளை விரும்புபவர் என்றால், குருடனுக்கு அந்திநேர வானம் எவ்வளவு வண்ணமயமானதாக இருக்குமோ, அப்படியே இந்தக் கதைகளும் உங்களுக்குச் சலிப்பூட்டுவதாகவும், எந்த வண்ணமும் இன்றியும் இருக்கும். ஆனால் இரவின் நடுவே அமைதியான இசையை ரசிக்கத் தெரிந்தவர், தூரத்தில் எழும்பும் அலைகளின் மெல்லிய சப்தத்தையும், பெருமேய்ச்சல் நிலத்தின் நடுவே காற்று எழுப்பும் ஆர்ப்பாட்டமில்லாத சப்தத்தையும் கேட்க தெரிந்தவர் என்றால், நீங்கள் இந்தக் கதைகளின் வசீகரத்தில் ஈர்க்கப்படுவது உறுதி. ஏனென்றால் ஸ்டெப்பி நிலங்களைப் பற்றிய இந்தக் கதைகள் கனவுகளின் மாயத்தைக் கொண்டவை; அவற்றின் சூழல் உங்களைச் சூழ்ந்து, உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஊடுருவி, உங்களது இதயத்தின் ஆழத்தின் வழியே ஐந்து புலன்களை மட்டுமின்றி, உங்களது ஆறாவது உணர்வையும் - இன்னதென்று விளக்கமுடியாத அந்த உணர்வையும் எழுப்பி உங்களை மிகவும் தெளிவாக உணர வைக்கும். அந்த உணர்வுதான் - அல்லது அதை ஒரு ஆன்மீக தரிசனம் என்று சொல்லலாமா - நம்மை ஒவ்வொரு கடிகார முள்ளின் சத்தத்திலும் நித்தியத்தையும், நீரின் ஒவ்வொரு துளியிலும் முடிவற்ற தன்மையையும் உணர வைக்கிறது. அந்த உணர்வே, இரண்டு கனவுகளின் நடுவேயான கரடுமுரடான அனுபவம் என்னும் பாதையில் நாம் செல்லும் போது, நாம் எதிர்பாராத நேரத்தில், சட்டென்று தலையைத் திருப்பும் போது, பல புதிய உலகங்களைப் படைத்து விட்டுச் செல்லும் கடவுள், ஒரு நொடி நின்று நம்மை நோக்கி புன்னகைப்பதை காண வைக்கிறது."