Description
உலகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும். இதுவே உலக வரலாறு காட்டும் உண்மையாகும். அரசதிகாரம் மக்களை ஒடுக்கிய காலங்களில் அதனை நியாயப்படுத்தும் சாத்திரங்களும் எழுதப்படும்.
பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிமைப்படுத்தி தாங்கள் அடிமையென்று தங்களையே ஏற்கச் செய்யும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத்தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கின்றோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறையாகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திரள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம்.
பிறப்பு வழிப்பட்ட பார்ப்பனியத்தினை மட்டும் எதிர்ப்பதில்லை இந்த வெளியீட்டின் நோக்கம். பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களும் மறுப்புக்குரியவர்கள்.
ஆராய்ச்சியாளர்கள் இவர்களைப் புதிய பார்ப்பனர்கள் (Neo-Brahmins) என அழைக்கின்றனர்.
நிகழ்காலத்தில் எல்லா வகையான ஊடகங்களையும் பார்ப்பனியக்கருத்தியல் தனதாக்கிக் கொண்டது. பார்ப்பனியம் என்பது ஒரு பண்பாட்டு வல்லாண்மை என்ற கருத்தை முன் வைத்தே இந்த வெளியீடு உண்மையான சனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கின்றது.