Description
ஜெயகாந்தன் தனது மனசாட்சியை ஒத்த நண்பர்களுடன் தனிமையில் உரையாடுவதென்பது, சுற்றிலும் அடைக்கப்பட்ட எந்தவொரு பண்பாட்டுத் தட்டிகளோ, இறுக்கி மூடப்பட்ட கலாச்சாரக் கதவுகளோ, தனிமனித சுதந்திரங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நாகரிக சபைகளோ, ஆத்திகமோ, நாத்திகமோ, பெண்ணியமோ, ஆணியமோ எதுவொன்றும் தடுக்க முடியாத தனித்ததொரு சிந்தனைப் பெருக்கின்
மடையுடைத்த வெள்ளம்தான்.
அவரது பேச்சுக்களை அருகிருந்து கேட்கும்போது, அதில் நமக்குப் பல முரண்கள் தோன்றினாலும், அவர் பேச்சின் வீச்சில் இருக்கும் தெளிவெனும் மாயை, நமது சிந்தையைக் கவிந்து செயலிழக்கச் செய்துவிடும். உணவோ, உலகமோ ஒன்றும் நண்பர்களின் நினைவில் குறுக்கிடாது. ஆனால் மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. பல நாட்கள் பேச்சின் நீட்சியால் உணவைப் பற்றிய உணர்விருந்தும், அதையிழந்து, நான் பசியினால் தவித்திருக்கிறேன். அதற்குக் கோரப் பசியைத் தூண்டும் எனது வயதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
மரங்களுக்கு மழையே போதும்: செடிகளுக்கு இடையிடையே நீர் வேண்டும்
அல்லவா!
- கௌதமன்