Description
இந்நூலைப்பற்றி... ''யாம் அறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை! உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை! ) மன விரக்தியோடு வாழும் எனக்கு நான் படித்து உள்ள தமிழ்மொழியின் - கவிதைகள், பாடல்களே பல நேரங்களில் என் மனதிற்கு இதங்களை தருகின்றன ! இறைவன் இருக்கிறான் என நான் நம்பி வாழ்ந்த காலங்களான 2009, 2018ஆம் ஆண்டுகளில் கம்ப இராமாயணப் பாடல்கள் 10368, மிகைப் பாடல்கள் 1293ஐயும் ‘நவில் தொறும் நூல் நயம் போல' படித்து கம்பரைத் தெய்வமாக நினைக்கத் தொடங்கிவிட்டேன்! 2018 நவம்பர் மாதம் என் அருமைப் பேரக் குழந்தை அருள்மொழியை இழக்கக்கூடாத கொடுமையான வழிகளில் இழந்துவிட்டு ''நோம் என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே; இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, அமைவு இலன் ஆகுதல் நோம் என் நெஞ்சே!" என்று வாழ்கிறேன். இன்றும் கம்பரின் உன்னத பாடல்களின் நயங்களை விளக்கி, பொதிகை சேனலில்,கேட்போரைக் கேட்க தூண்டும் 'வில்லும் சொல்லும்' நிகழ்ச்சியில் வழக்கறிஞர் இராமலிங்கம் கூறுகிறார். இவற்றையும் நானும், அக்காவும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வக்கீல் நம் தாய்மொழியாம் தமிழில் கம்பர் பெருமானார் தம் பாடல் களான மலர்களால் தாய் தமிழ்க்கு அர்ச்சனை செய்து இருப்பதாகவே எண்ணி நான் வியக்கிறேன் ! கம்பரின் பாடல்களின் நயங்களை ஓரளவுக்காவது புரிந்துக்கொள்ள தக்க, தமிழ் இளங்கலையை படிக்க வைத்த தமிழ் வித்வான் -ஆன எம் தந்தை கு. கிருஷ்ணசாமியை என் நெஞ்சாரப் புகழ்கிறேன்! அவரின் மகள் நான் என்று சொல் லிக்கொள்வதில் பெருமையும் கொள்கிறேன்! அருள்மொழி கி. உண்ணாமலை