Description
உப்புக் கணக்கு’ என்ற இந்த நாவல், காந்திஜி நடத்திய உப்புச் சத்தியாகிரகத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடந்த போராட்ட நிகழ்வுகளை நம் கண்முன் உயிர்ப்புடன் காட்சிப்படுத்துகிறது.
ஆங்கிலேய அடக்குமுறை, எளிய மக்களின் தியாகம், தலைவர்களின் வீரம், காந்திஜியின் தலைமை, அஹிம்சை மேல் வெகுஜன மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை போன்ற வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் புனையப்பட்டுள்ள இந்த நாவல், ஒரே சமயத்தில் வரலாற்றுப் பதிவாகவும் தேர்ந்த ஓர் இலக்கியமாகவும் திகழ்கிறது.
**
வித்யா சுப்பிரமணியம் இந்த நாவலை உப்புச் சத்தியாகிரகத்தை மட்டும் பற்றிய நாவலாக எழுதவில்லை. ஒரு காதல் கதையை நோக்கிப் போவது போலவும், ஒரு பெருங்குடும்பத்தின் கதை போலவும் நாவலின் முதல் பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வித்யாவின் வெற்றி. நாவலுக்காக ஒரு சிறு தகவலையும் கூட முனைந்து திரட்டியிருக்கிறார். வரலாற்றைப் புனைவுக்குள் வைத்துக் கொடுப்பது என்ற இந்த வேலையை, வரலாற்று அறிவும் புனைவாற்றலும் கொண்ட ஓர் எழுத்தாளர்தான் செய்ய முடியும்.
நாவல் வேதாரண்யத்தில் உப்பெடுப்பதோடு நிறைவடைவதில்லை. அதையும் தாண்டி இந்திய - பாகிஸ்தான் பிரிவினை வரை செல்கிறது. அதில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம் வரலாற்றை நேர்மையாக அணுகும் அணுகுமுறை.
- மாலன்