Description
திருமூலர் என்னும் தவயோக சித்தர், ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடி வைத்த தொகுப்பே திருமந்திரம் என்ற நூலாகும். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறுக என்ற நல்ல எண்ணத்தில் திருமூலர் தன்னுடைய யோக, இறை அனுபவங்களை பாடலாக்கி நமக்குத் தந்திருக்கிறார். இந்த நூலில் தேவியைப் பற்றியும், சிவபெருமான் குறித்தும், ஸ்ரீசக்கரம், திருவம்பலச் சக்கரம் போன்றவை குறித்தும் மிக ரகசியமான அரிய தகவல்கள் இருக்கின்றன. அவற்றை எல்லோரும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் நண்பர் பிரம்மஸ்ரீ வேணுசீனிவாசன் அவர்கள் எளிய தமிழில் எழுதிக் கொடுத்திருக்கிறார். சித்த வித்தையில் தீட்சை பெற்று, பலவருடங்களாக, யோகம், தியானம், ஜெபம் என்று வாழ்ந்துவரும் அவரை திருமூலரே தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சித்தரின் ஆசி இல்லாமல் இதுபோன்ற ஒரு பெரிய நூலுக்கு உரை எழுதுவது சாத்தியமே இல்லை. வெறும் ஏட்டுப்படிப்பு மட்டும் இதற்குப் போதாது என்பதே என் நம்பிக்கை. திருமூலரின் ஆசிகள் திரு, வேணுசீனிவாசன் மூலமாக எனக்கும், இந்தப் புத்தகத்தின் மூலமாக வாசகர்களுக்கும் ஏற்பட வழி கிடைத்து இருக்கிறது.