Description
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார்’ என்ற பாடல் வரிகள் நிச்சயம் எம்.ஜி.ஆரைத்தான் நினைவுபடுத்தும். திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் தனி இடம்பிடித்த எம்.ஜி.ஆர். அவர்கள், ஒரு கட்டத்தில் தனி அரசியல் கட்சி தொடங்கி அந்தக் கட்சியை ஐந்தே ஆண்டுகளில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திக் காட்டியவர். அந்த அளவுக்கு தமிழக மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தவர். திரைப்படங்களில் எப்படி நடித்தாரோ அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்துகாட்டியவர் எம்.ஜி.ஆர். அதனால் அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த பின்னும் M.G.R எனும் மூன்றெழுத்து தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் தொண்டனாக, பக்தராக விளங்கிய இந்நூலாசிரியர், எம்.ஜி.ஆருடன் தான் பழகிய அனுபவத்தையும் எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி தொடங்கியது முதல் அவர் மறைவு வரையிலான அரசியல் நிகழ்வுகளையும் கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவர் கொண்டுவந்த திட்டங்கள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அரசியலில் எம்.ஜி.ஆர் எடுத்த முக்கிய நிலைப்பாடுகள் பற்றியும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர் பற்றி வெளியான நூல்களில் இந்த நூல் தனித்த இடம்பெறும். உடலால் மறைந்துவிட்டாலும் மக்களின் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் பற்றி இனி அறியலாம்.