Description
கவிஞர்கள் தங்களைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள் மேல் உடனுக்குடன் வினைபுரிகிறவர்கள்; இந்தத் தொகுப்பில் பாதிக்குப் பாதி அத்தகைய கவிதைகள் அமைந்துள்ளன. மீதிக் கவிதைகள் முதுமைக் காலத்தில் படையெடுத்து வந்து ஆக்ரமிக்குமே அந்தப் பழைய நினைவுகளில் இருந்து கருக் கொண்டவை. கவிஞர் சிற்பி எந்த அளவிற்கு வார்த்தைக் கடல் எழுப்பும் அலைகளால் மொத்துண்டு கிடக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பே ஒரு சான்று; அவருடைய கவிதைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்தவன்; உரையாடியவன்; விமர்சனக் கட்டுரைகள் எழுதியவன் என்ற பின்புலத்தில் நின்று சொல்லுகிறேன்; தொண்ணூறு வயதை எட்டப் போகும் கவிஞரின் இந்தக் கவிதைகள் எல்லாமே இளமேனி அழகோடு புத்தம் புதிதாக இருக்கின்றன; ஒவ்வொன்றும் புதுப்புதுப் பாணியில் பிறப்பெடுத்துள்ளன; இந்த அதிசயம் நிகழ்வதற்கு என்ன காரணம்? இந்தக் கவிதைகளைக் கவிஞர் சிற்பி எண்ணி எண்ணித் தேவையை முன்னிறுத்தி வலிந்து எழுதவில்லை; அவர் வழியாகத் தானாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவை இவை. கவிஞர் வார்த்தைகளால் நிரம்பித் ததும்பிக் கிடக்கிறார். காலம் நிகழ்த்திக் காட்டும் அழகுக் கோலங்கள் இவை.
க. பஞ்சாங்கம்