Description
முப்பதுகளின் ஆரம்பங்களில் இருக்கும் பெண், முதுகலை முடித்து சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண், என்னதான் கிராமத்தில் வளர்ந்திருந்தாலும், இத்தனை விஷயங்களை எப்படித் தெரிந்து கொண்டார் என்ற ஆச்சரியமே தொகுப்பை முடித்ததும் எனக்கு முதலில் ஏற்பட்ட உணர்வு.
கொங்கு நாட்டின் சடங்கு, சம்பிரதாயங்கள், விவசாயக்குடிகளின் வாழ்வியல் எல்லாவற்றையும் கதைகளில் கலந்து கொண்டு வந்திருக்கிறார். கொங்கு வட்டார வழக்கு கதைகள்தான் முழுவதும்.
'நெல்கூட்டி' நன்றாக வந்திருக்கிறது. முத்தாள் படும்பாட்டை மொத்தக் கதையிலும் விவரித்து விட்டு உருளும் பந்து மேசையின் முனைக்கு வருவதை எதுவும் செய்ய இயலாது பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு கிளைமேக்ஸ். இதில் மட்டுமல்ல, மிளி, முட்டுத்துணி, இடவன், மொசக்கறி ஆகிய கதைகளிலும் Murphy's law Apply ஆகிறது.
சுற்றிவளைக்காது நேரடி கதைசொல்லலில், உணர்வுகளைத் தூக்கலாக்காது மெல்லிய தொனியில் அவர் விரும்பும் விசையை வாசகருக்குக் கடத்துகிறார். நல்ல மொழி, கிராமத்து வாழ்வியல் குறித்த ஏராளமான தகவல்கள் இவரது பலம்.
நன்றி: சரவணன் மாணிக்கவாசகம்