Description
மதுரை பாண்டிய அரசின் கிழக்கே இன்றைய புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் ஒன்றிணைந்த பகுதி மறவர் சீமை என்றும் கள்ளர் நாடு என்றும் சேது நாடு என்றும் வரலாற்றில் பதியப்பட் டுள்ளது. சேது நாட்டின் தலைவர்கள் என்ற பொருளில் சேதுபதிகளாக, மதுரை சுல்தானியர் காலத்திலும் விஜயநகர நாயக்கர்கள் காலத்திலும் அதற்குப் பின்னும் தன்னாட்சி பெற்றவர்களாகவும் தோல்வி காணாத அரசர்களாகவும் சேதுபதி மன்னர்கள் இருந்திருக்கின்றனர். 12-ஆம் நூற்றாண்டு முதலே சேதுபதிகள் ஆட்சி நடத்தியதற்கான சில குறிப்புகள் வரலாற்றில் ஆங்காங்கே காணப்பட்டாலும் 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலான வரலாறுதான் ஓரளவுக்கேனும் நமக்குக் கிடைத்துள்ளது.
சேதுபதி மன்னர்களின் தோற்றம். வளர்ச்சி, வீரம், அறக் கொடைகள். ஆன்மிகப் பணிகள் என்று ஒரு அரச மரபின் அத்தனை செய்திகளையும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல், சேதுபதிகள் பற்றிய முழுமையான ஆவணமாக உள்ளது.