Description
ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் 1945-இல் பிறந்து, 1968-இல் வழக்குரைஞராகி 56 ஆண்டுகளாக நூலாசிரியர் பணியாற்றிவருகிறார். அறநிலையத் துறை வழக்குரைஞராக இருந்து ஏராளமான சொத்துகளை மீட்டது, பொதுத்துறை நிறுவனங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி பெருந்தொகை வசூலித்து உதவியது என்று அரசுக்கு செய்த உதவிகளோடு, ஆனஆன்மிகத்துக்கும், மக்களுக்கும் செய்த சாதனைகள் அளப்பரியது.
இவர் தனது 78 ஆண்டு கால புனித மண் வாழ்க்கையில் தான் கண்ட காட்சிகள், கேட்ட செய்திகள், ரசித்த எழில்கள், தரிசித்த மகான்கள், வியந்த மாண்புகள், வருந்திய இழிவுகள், பழகிய நண்பர்கள், இழந்த இழப்புகள், பெற்ற வெற்றிகள், கற்ற பாடங்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். அரசியல், ஆன்மிகம், இலக்கியம், பகுத்தறிவு, கல்விச் சாலைகள், மருத்துவம், சுற்றுலாத் தலங்கள்... என்று திருவண்ணாமலையின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தொகுத்துள்ள நூலாசிரியரின் முயற்சியும், உழைப்பும் படித்து முடித்தவுடன் வியக்க வைக்கிறது.
மகாத்மா காந்தி வருகையின்போது ரமண மகரிஷியை ஏன் சந்திக்கவில்லை, குருநானக் தேவ் வருகை போன்றவை வரலாற்றுப் பதிவுக்குரிய ருசிகர தகவல்கள் நூலில் நிறைந்துள்ளன.
47 கட்டுரைகள் மட்டுமல்லாது; என்னுரையும், நிறைவுரையும்கூட பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரிக்கு பல்வேறு தகவல்களை எடுத்துரைக்கின்றன.
ஒரு வரியைக் கூட படிக்காமல் தள்ளிவிடாத அளவுக்கும் தகவல்களை தெளிவாகவும், சுருக்கமாகவும் தெரிவித்துள்ள நூலாசிரியரின் இந்த ஒரு நூல், எண்ணற்ற நூல்களின் தொகுப்பு எனலாம். திருவண்ணமலையை முழுமையாக அறிய வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது.