Description
விபூதிபூஷண் பந்தோபாத்யாய எழுதிய நாற்பது நூல்களில் பிரபலமாக விளங்கும் சிலவற்றில் ஒன்று, 'இலட்சிய இந்து ஓட்டல்'. வங்க இலக்கியத்தில் இதற்கோர் சிறப்பிடம் உண்டு. என்றாவது ஒருநாள் சொந்த ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஒரு கிராமவாசியின் கனவைச் சுற்றி வேயப்பட்டுள்ள இந்நாவலில் எளிய கம்பீரமும், கபடின்மையும் இழைந்து உள்ளன. மனித வாழ்வில் அவ்வப்போது தென்படுகிற மேன்மையின் சாயல் இதில் இயல்பாகப் படிந்திருக்கிறது.
சத்யஜித் ரேயின் உலகப்புகழ் பெற்ற திரைக்காவியமாகிய, 'பதேர் பாஞ்சாலி' நாவலின் ஆசிரியரான விபூதிபூஷண் பந்தோபாத்யாய, வங்க இலக்கியத்துக்கு உலக அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ள வெகுசிலரில் ஒருவர். எளிய முறையில் அரிய அனுபவங்களை உருவாக்குவதில் இவர் வல்லவர்.
த.நா.சேனாபதி, தமிழகத்தின் தண்டலம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், வங்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். தானே பல நூல்களை எழுதியதுடன்,ரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், விபூதிபூஷண் உள்ளிட்ட ஏராளமான வங்க எழுத்தாளர்களின் நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.