Description
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை இரண்டு வகையாகப் பகுக்கலாம். முதலாவது வகை, அ-தர்க்கம் சார்ந்த மாயங்கள் நிகழ்பவை: புதிர்த் தருணங்களும் கவித்துவம் நிறைந்த சுழல்மொழியும் கொண்டவை. இரண்டாவது வகை, நடைமுறை வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பவை. நேரடியான ஆனால் செறிவான இயல்பு மொழியும், யாருக்கும் நடக்கக்கூடியவையான சம்பவங்களும் இடம்பெறுபவை.
இரண்டு வகைகளுக்கும் பொதுவான அம்சம், மனித மனத்தின் நுண் அசைவுகளை அவை பதிவுகொள்ளும் விதம்.
நடப்பியல் கதைகளில், பால்ய காலம் குறித்து எழும் சித்திரங்கள் காட்சி பூர்வமானவை. கூர்ந்த வாசிப்புக்கு மட்டுமே அகப்படக் கூடிய அபாரமான நுட்பங்கள் கொண்டவை. குறிப்பாக, அலையறியாதது கதையில், சிறுமியின் தாயார் நியாயம் கேட்க வரும்போது, 'ஆனா...' என்ற ஒரே சொல்லில் பொதிந்திருக்கும் ஆழமும் பயங்கரமும் அலாதியானவை. இந்த ஒரு கதை, தன்னுள் புதைத்து வைத்திருக்கும் மர்மம் காரணமாக, இரண்டு வகையிலும் பொருந்தக்கூடியது.
தான் அதிராத மொழியில் விவரிக்கப்படுகிற, வாசிப்பவரை அதிர வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அனைத்துக் கதைகளிலுமே இருக் கின்றன. தமிழகச் சூழலில் எழுதப்படும் சமகாலக் கதைகளுக்கு நிகரான பெறுமதி கொண்ட கதைகள் இவை./
- யுவன் சந்திரசேகர் (பின்னட்டைக்குறிப்பு)