Description
டால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் சுகதுக்கங்களும் அபத்தங்களும் விவரிக்கபடுகின்றன. விமர்சிக்கபடுகின்றன. அதே நேரம் ரஷ்யவாழ்வின் தனித்துவங்களும் அதன் கலாச்சார நுண்மையும் நம்மால் உணர முடிகிறது.
குறிப்பாக டால்ஸ்டாய் என்ற கதைசொல்லியின் ஆளுமை பன்முகப்பட்டது. சிலவேளைகளில் அது ஒரு போர்வீரனைப் போல கலக்கமற்று வாழ்வினை விவரிக்கிறது. சில வேளைகளில் அது ஒரு ஞானியைப் போல வாழ்வு இவ்வளவு தான் என்று அடையாளப்படுத்துகிறது. இன்னும் சில தருணங்களில் அது ஜிப்சியைப் போல சாகசமே வாழ்க்கை என்கிறது. சில தருணங்களில் இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்பாக மனித வாழ்க்கை காற்றில் அடித்து செல்லப்படும் ஒரு மணல்துகள் என்று சுட்டிக்காட்டுகிறது.
- எஸ். ராமகிருஷ்ணன்