Description
புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத்துவம், உலக அமைதி இவை சார்ந்த கருத்துக்களைத் தேசிய எல்லைகளைத் தாண்டியும் பரப்ப முயன்றார். சோஷலிச சித்தாந்தத்தைப் பௌத்த அறவியலோடு பொருத்தி, இவ்விரண்டையும் காந்தியத்தின் வாய்மை, அஹிம்சை இவற்றோடு இணைத்துக் கொண்டுசெல்ல முனைந்தார்.
பௌத்தத்தை உயிர்ப்பித்து அதை வாழும் சமயமாக ஆக்கிய பெருமை தர்மானந்தரையே சாரும். பௌத்தத்தின் போதனைகளையும் நடைமுறைகளையும் மீட்டுக் கொண்டுவந்ததோடு நில்லாமல், சமகாலத்தியச் சமூக, அரசியல் சித்தாந்தங்களோடு அதற்குள்ள பொருந்தப்பாட்டையும் நிறுவிக்காட்டினார். புதியதொரு ஒருங்கிணைந்த உலகப் பார்வையை உருவாக்கினார். இதை எதற்காக, எவ்வாறு உருவாக்கினார் என்பதைத்தான் இந்தத் தன் வரலாறு விவரிக்கிறது.