Description
கடம்பன்குடி என்னும் ஊரின் எல்லையில் 23 அகழ்வாராய்ச்சியாளர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அந்தக் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆய்வாளர்கள் கடம்பன்குடி கிராமத்துக்கு அருகில் காட்டிற்குள் உள்ள ஒரு கோட்டையை ஆராய்ச்சி செய்ய ஒரு மாதத்திற்கு முன்பாக சென்றார்கள் எனக் கூறப்படுகிறது. காட்டிற்குள் விறகுக்காகச் சென்ற பெண்மணிகள் சடலங்களைக் கண்டு பயந்து ஓடிவந்து ஊர்ப்பெரியவர்களிடம் தெரிவித்தார்கள் என்றும், அவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆராய்ச்சிக் குழுவுக்குத் தலைமை தாங்கிய பெண் ஆராய்ச்சியாளர் தவிர, மற்ற அனைவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெண் ஆராய்ச்சியாளரைத் தேடும் பணி போலீசாரால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் இருபது நாட்களுக்கும் மேலாக காட்டிற்குள் கிடந்திருக்கலாம் என்றும், உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால் காட்டுமிருகங்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணமும் அறிவித்துள்ளது.