Description
ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றையும் இந்தியாவின் வரலாற்றையும் பிரித்துப் பார்க்க முடியாது. தொடக்கத்தில் சி.ஆர் என்று அழைக்கப்பட்ட ராஜாஜியின் இளமைக்காலம், வழக்கறிஞராகப் பணியாற்றிய காலம், அரசியல் ஈடுபாடு, சமூக சேவை, காந்தியுடனான பிணைப்பு, இந்தியச் சுதந்திரத்திற்கான முன்னெடுப்பு, கலந்துகொண்ட போராட்டங்கள், சிறை வாழ்க்கை, குடும்ப வாழ்வு, இலக்கியப் பணி, ஈவெராவுடனான நட்பு, இந்திய - தமிழக அரசியலில் அவர் எடுத்த முக்கிய முடிவுகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள், கட்சியில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு என இந்திய வரலாற்றின் வழியே பயணிக்கும் ராஜாஜியின் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் புத்தகம். ராஜாஜியின் அரசியல் வாழ்வு இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற அளவுக்கு இணையாகக் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகியது. அவர் நிர்வாக ரீதியாக எடுத்த சில முடிவுகள் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. ராஜாஜி கொள்கை சார்ந்தும் மதம் சார்ந்தும் கருத்து ரீதியாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டார். இந்தப் புத்தகம் அந்தக் காலகட்டங்களை அதே வீரியத்துடன் பதிவு செய்துள்ளது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் மேடைதோறும் ஒலிக்கும் குரலாக இருக்கும் இப்புத்தக ஆசிரியர் கு.சடகோபன், நேரடிச் சாட்சியாக இருந்து ராஜாஜியின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். இன்று வரை விவாதப் புள்ளியாக இருக்கும் ராஜாஜியைக் குறித்து இதுவரை தமிழில் வெளிவந்துள்ள மிகச்சில புத்தகங்களில் இந்தப் புத்தகம் ஒரு முக்கிய இடம்பெறும்.