Description
‘மகாபாரதத்தில் இருப்பதுதான் எங்கும் இருக்கும். மகாபாரதத்தில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது’ என்று வியாசர் கூறுகிறார். இத்தகு மகிமை வாய்ந்த ஸ்ரீ மகாபாரதத்தில் இருக்கும் ஒரு பகுதிதான் விதுர நீதி.
பாண்டவர்களுக்கு ஊசிமுனை நிலம்கூட தரமுடியாது என்ற துரியோதனனின் பதிலுக்குப் பின், அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருந்த திருதராஷ்டிர மன்னன் விதுரரிடம் தன் மனக்கவலை தீர நல்லுபதேசங்களை அருளுமாறு வேண்டினார். அச்சமயத்தில் விதுரரால் அளிக்கப்பட்ட போதனைகளே விதுர நீதி.
ஒரு மனிதன் எப்படிச் சிறந்த மனிதனாக வாழவேண்டும் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது இந்த நீதி நூல். உலகியல், அரச நீதி, நன்னடத்தை, குடும்பம், சமுதாயம், தர்மம் என ஒரு மன்னனுக்கான போதனைகளும், ஒரு சாதாரண மனிதனுக்கான வாழ்க்கை நெறிகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
சம்ஸ்கிருத மூலத்தில் எட்டு அத்தியாயங்களில் 596 சுலோகங்களாகப் பரந்த விதுர நீதியை மூலத்தின் மேன்மை குன்றாமல், அழகிய தமிழில் தெள்ளிய நடையில் நமக்கு அளித்துள்ளார் ராஜி ரகுநாதன்.