Description
பிறப்பு, வளர்ப்பு, இறப்பு -இவைகளுடன் கொண்டாட்டம், போராட்டம், திண்டாட்டம் போன்ற பல நிகழ்வுகளுடன் மனிதன் வாழும் இடம்தான் இந்தப் பூமியின் மீது உள்ள அவனது இல்லம். நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் எனப்படும் பஞ்ச பூதங்களின் ஆளுமை, திசைகளின் ஆற்றல், சூரியன் வெளிப் படுத்தும் வெளிச்சம், வெப்பம் மற்றும் அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட் போன்ற கதிர் வீச்சுகள், காற்றின் விசை, மழைப்பொழிவு இவைகளுடன் பூமியின் புவி ஈர்ப்பு, காந்த சக்தி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பூமிக்கு உயிர் உண்டு என்று வாஸ்து சாஸ்த்ரம் கூறுகிறது. எப்படி சுவாசிக்கும் காற்று அனைவருக்கும் பொதுவானதோ, அதைப்போலவே வாஸ்து சாஸ்த்ரமும், சாதி, மதம், இனம், மொழி நாடு இவைகளுக்கு அப்பாற்பட்டது, பொதுவானது. அதிர்ஷ்டம் என்பது செல்வச் செழிப்பு, வசதிகள், புகழ், அந்தஸ்து, பதவி, வாய்ப்பு இவைகளைச் சார்ந்தது மட்டும் அல்ல. வாழும் இடத்தையும் சார்ந்தது. தங்கத்தட்டில் ராஜபோஜனம் வைத்து அளித்தாலும், அதைச் சாக்கடை அருகில் அமர்ந்து உண்ண முடியுமா? அதே ரீதியில்தான் அதிர்ஷ்டத்தை அறை கூவி அழைக்க, வாழும் வீடும் அதிர்ஷ்டகரமானதாக இருக்க வேண்டும்.