Description
இந்திய தேசியம் என்பது ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியை எதிர்க்கத் தலைப்பட்டதிலிருந்து உருவெடுத்தது என்று சொல்லலாம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நமது நாட்டுப் பற்றாளர்கள், இயக்கங்கள், கோஷ்டிகள் மற்றும் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் ஆகியன இந்திய தேசிய இயக்கமாக படிப்படியாக வலுப்பெற்று இந்திய விடுதலைக்கு வழிவகுத்தது எனலாம். இவ்வாறு இந்திய விடுதலைப் போராட்டத்தில் இடம் பெற்ற அனைத்து நிகழ்வுகளையும் இந்திய தேசிய இயக்க வரலாறாக இந்நூலில் படம் பிடித்துக் காட்டுகின்றார் வரலாற்று அறிஞர் பேராசிரியர் க.வெங்கடேசன். TNPSC, UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடிய வகையில் அமைந்துள்ள, அதே நேரம் இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய இந்நூலை மொத்தம் 11 பெரும் பகுதிகளாகப் பிரித்து அவற்றின் கீழ் 34 அத்தியாயங்களில் விவரித்துள்ளார் பேராசிரியர் க.வெங்கடேசன். 442 பக்கங்கள் என விரிவாகச் செல்லும் இந்நூலில் ஆங்கிலேய ஆதிக்கம், அதற்கு எதிராக கிளர்ச்சிகளும் இயக்கங்களும் உருவாதல், இந்தியப் பிரிவினை, இந்திய சுதந்திரம் ஆகிய தலைப்புகளின் கீழான அத்தியாயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இந்திய தேசிய இயக்கம் தொடர்ச்சியாகப் போராடி வெற்றியைப் பெறவில்லை என்றும், அது படிப்படியாக, விட்டுவிட்டு, தகுந்த பல முறைகளைப் பின்பற்றி எவ்வாறு இந்திய விடுதலை என்ற வெற்றிக் கனியைப் பறித்தது என்பதை பாங்குற இந்நூலில் பட்டியலிட்டுக் கூறுகிறார் இதன் நூலாசிரியர். மேலும் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக செயல்படாமல் எவ்வாறு அது ஓர் இயக்கமாக சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியது என்றும் இந்தியர்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியது என்றும் கூறியுள்ளார். காங்கிரஸின் மிதவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் வன்முறைவாதிகள் பற்றி விரிவானதொரு பார்வையையும் தந்துள்ளார். இதற்கும் மேலாக இந்நூலில் ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாகிரம், வெள்ளையளே வெளியேறு இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், சுயராஜ்ஜிய இயக்கம் போன்றவற்றைப் பற்றியும், இந்திய அரசாங்கச் சட்டம், இந்திய விடுதலைச் சட்டம் பற்றியும் விரிவாக கூறியுள்ளார். தொடர்ந்து இந்திய தேசிய இயக்கத்தில் புரட்சியாளர்களின் பங்கு, பத்திரிக்கைகளின் பங்கு, நேருவின் பங்கு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் மேற்கொண்ட இந்தியப் போர் முயற்சி ஆகியவற்றை மையமாக கொண்ட பல்வேறு முக்கிய சங்கதிகள் இந்நூலை நிறைவாக்குகின்றது எனலாம். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பற்றிக் கூறும் இந்த நூல் முன் சொன்னது போல் TNPSC மற்றும் UPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வரலாற்றுத்துறை மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றாளர்கள் மற்றும் வரலாற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படும் அரிய நூலாகும். தேர்விலும், வாழ்விலும் வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

