Description
"வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.
தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை.
அவரது கதைமாந்தர்கள் இலட்சிய உருவகங்கள் அல்ல. பலவீனங்களும், குறைகளும், பேதங்களும் நிறைந்த சராசரி மனிதர்களே. தங்களுடைய அத்தனை போதாமைகளுக்கு நடுவிலும் ஏதோ ஒரு தருணத்தில், அவர்கள் அடைகிற (அ) அடைய முயலுகிற மேன்மையைப் பற்றியதாக வேணுகோபால் அக்கறை எப்போதும் இருக்கிறது.
தவிரவும், மனிதனின் அகந்தை பூரணமடையாவண்ணம் ஏதோ ஒரு விதத்தில் அவனை குறுகச் செய்து வேடிக்கை பார்க்கும் வாழ்வின் புதிர்த் தன்மைகள் பற்றிய ஒருவித முதிர்ந்த அணுகலும் எழுத்துக்களில் பளிச்சிடக் காண்கிறோம். இத்தன்மைகளினாலேயே இளம் தலைமுறை தமிழ்ப் படைப்பாளிகளில் இவர் தனித்துத் தெரிவதோடு அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்துபவராகவும் இருக்கிறார்."
க.மோகனரங்கன்