Description
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த தமிழ் இலக்கியப் பேரறிஞர் மாயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை அவர்கள். அன்னார் இயற்றிய கவிதைகள், இசைப் பாடல்கள், புதினங்கள் இவையெல்லாம், அவரது சிறந்த தமிழ்ப் பற்றுக்கும், புலமைக்கும் எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கின்றன. தமிழ் மொழியைப் படித்தாலே 'பாவம்' என்று பலர் கருதிய அந்த நாளில் திரு. வேதநாயகம் அவர்கள் தமிழ் மொழியின் நந்தாவிளக்காகத் திகழ்ந்தார்கள்.
இன்றைக்குச் சற்றேறக் குறைய 150 ஆண்டுகட்கு முன்னர் 1879ம் ஆண்டில் அவர் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' எனும் புதினம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புரட்சியையே தோற்றுவித்து, அறிஞர் வேதநாயகம் அவர்களைத் தமிழ்ப் புதினங்களின் தந்தை என்று உலகுக்கு அறிவித்தது.
அவரது அரிய நூல்களான பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி எனும் புதினங்கள் இன்று நாம் காணும் தமிழ் நாவல்களுக்கு (புதினங்களுக்கு) வழி காட்டிய முன்னோடிகளாகும்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட போதிலும் இன்றும்கூட பிரதாப முதலியார் சரித்திரத்தின் சுவை குன்றவே இல்லை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத சீரிய நெடுங்கதையாக அது மிளிர்கிறது. நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தின் பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் கண்ணாடியாகவும் அது திகழ்கிறது. பக்கந்தோறும் திரு. வேதநாயகம்பிள்ளை அவர்களின் சொல்லாற்றலும், நகைச்சுவை ஆற்றலும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன. அவரது எளிய தமிழ் நடை, சம்பவங்களைச் சுவைபடக் கூறும் பேராற்றல் இவையெல்லாம். ஒன்று சேர்ந்து 'பிரதாப முதலியார் சரித்திரத்துக்குத் தமிழுலகத்தின் முதல் நாவல் (புதினம்) என்ற உயர்வை அளிக்கின்றன.

