Description
பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். "அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார். பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது. "அள்ள அள்ளப் பணம்" என்ற தொடர் புத்தக வரிசையில் நான்காவது புத்தகம் இது. முதல் புத்தகம், பங்குச்சந்தை என்றால் என்ன என்ற அறிமுகத்தைக் கொடுத்தது. இரண்டாவது புத்தகம், ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிகல் அனாலிசிஸ், பொருளாதாரம் போன்ற அடிப்படைகளைச் சொல்லித் தந்தந்து. மூன்றாவது புத்தகம், ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் எனப்படும் வாய்ப்புகள் பற்றி கற்றுக் கொடுத்தது. இந்த நான்காவது புத்தகம் நீண்டகால முதலீடுகளைச் சரியாகச் செய்து நிறைவான செல்வத்தை எப்படிப் பார்ப்பது என்பதற்கு வழிகாட்டுகிறது. சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள 25-வது புத்தகம் இது.