Description
தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் அனைத்துச் சிறுகதைகளும் அடங்கிய முழுத் தொகுப்பு இது. சந்தேகமில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்து அவருடையது. தனி மனிதனின் பிரச்னைகளை, தேடல்களை, மனக்கொந்தளிப்புகளை, அற்ப ஆசைகளை, அவை தீராதபோது எழும் ஆதங்கத்தை, குமுறலை - ஆதவனைப்போல் நேர்த்தியாகப் பதிவு செய்தவர்கள் தமிழில் குறைவு.
***
‘1960-70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதை க்கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை - அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப்போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை. ’இண்டர்வியூ’, ’அப்பர் பெர்த்’ போன்ற அவருடைய பக்குவம் மிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்திரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன்.’
- அசோகமித்திரன்
‘நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்.’
- இந்திரா பார்த்தசாரதி
‘தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை ஆதவன் எழுதியிருக்கிறார். இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்... இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.’
- திருப்பூர் கிருஷ்ணன்