Description
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஐயர் துப்பாக்கிகளின் தோழன் ஆனார். சாகசங்களின் செல்லப்பிள்ளை ஆனார். இன்றைக்குச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட வாஞ்சிநாதனுக்கு, அன்றைக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குச் சொல்லிக்கொடுத்து ஆஷ் கொலைக்கு அஸ்திவாரம் அமைத்தார்.ஆளைப் பார்த்தால் நம்பவே முடியாது. அப்படியொரு ஆசாரசீலர். அமைதி தவழும் முகம். பார்வையில் தீட்சண்யம். கட்டுக் குடுமியும் கை நிறையப் புத்தகங்களும் ஒற்றை வேட்டியும் உருவிய தாடியுமாக ஐயர் நடந்துவந்தால் காவி மட்டுமே மிஸ்ஸிங்; மற்றபடி துறவியேதான் என்று சொல்லிவிடலாம்.ஆனால் இந்தியாவின் சுதந்தரத்துக்கு ஆயுதப் புரட்சி ஒன்றே தீர்வு என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. லண்டனில் படிக்கப் போன காலத்தில் வீர சாவர்க்கர் உருவாக்கி, உருவேற்றி வைத்த நம்பிக்கை அது.சாவர்க்கர் கைதானபிறகு, ஐயர் லண்டனிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்த விதம், கற்பனைகூடச் செய்யமுடியாதது. சாகசம் என்கிற சொல்லுக்கு அர்த்தம் சொல்லும் சரித்திரம் அது.ஐயரின் இன்னொரு முகம் இலக்கியம் சார்ந்தது. தமிழுக்குச் சிறுகதை என்கிற வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அவர். கம்பரில் தோய்ந்தவர், பின்னாளில் தம் தீவிரப் பாதையை விடுத்து, காந்தியத்திலும் தோய்ந்தது ஓர் அழகிய மாற்றம்.ஒரு காட்டாற்று வெள்ளம்போல் புறப்பட்ட ஐயரை, அவரது சாகசங்களைத் திறம்படப் படம்பிடிக்கும் இந்நூல், அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தது வரை விவரிக்கிறது. பிரசித்தி பெற்ற ஐயரின் 'குருகுல' சர்ச்சைகளையும் நடுநலைமையுடன் அலசி ஆராய்கிறது.